தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டது. இதைதொடர்ந்து கடந்த ஆண்டு மழை அறவே இல்லாமல் போனதால், விவசாயம் முற்றிலும் பாதித்தது. விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என தினமும் செய்திகள் வெளியானது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயிகளின் மரணத்தில் மெத்தன போக்கு இருக்க கூடாது. அதனை தடுக்க புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

இதனை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளும், பரிசீலனை செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்ற வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என கண்டனம் தெரிவித்தது. மேலும், இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், விவசாயிகளின் மரணம் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அதில், கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருந்தது.

மேலும் மொத்தம் 82 பேர் இறந்துள்ளனர். அதில் 30 பேர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனர். மற்ற 52 பேர் நீண்ட நாள் உடல் நலக்குறைவு, தீர்க்க முடியாத நோய், வயது முதிர்வு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டனர் என குறிப்பிட்டுள்ளது.