No egg in nutrition meals scheme
முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் சத்துணவுவில் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் ஒன்றுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் ஒரு முட்டையை ரூ.4.35க்கு நிர்ணயம் செய்து ஒப்பந்தம் பெற்று உள்ளது. ஆனால் தற்போது வெளிச்சந்தையில் ஒரு முட்டை ரூ.5.16க்கு விற்கப்படுகிறது.
இதனால் ஒப்பந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் முட்டை சப்ளை திடீரென்று நிறுத்தி விட்டது.
திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளுக்கு பள்ளிகளுக்கு சப்ளை செய்ய வெள்ளிகிழமை அன்று முட்டைகள் வந்து சேரும்.

ஆனால் இன்று வரை முட்டைகள் சப்ளை செய்யப்படாததால் நாளை பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் வாரத்தில் 5 நாட்கள் முட்டை வழங்க வேண்டிய நிலையில் ஒரு நாளைக்கு கூட முட்டை ஸ்டாக் இல்லாததால் சத்துணவு அமைப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
