விருதுநகர்,
விருதுநகரில் ஏழு மாதங்களாக குடிநீர் மற்றும் புழக்கத்துக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதால் இதற்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலும் மழை பொய்த்துப் போனதால் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது.
மாவட்ட தலைநகரான விருதுநகரில் 20 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் நகரில் பல பகுதிகளில் குழாய் உடைப்பு காரணமாக பல மாதங்களாக குடிநீர் விநியோக சுத்தமாக இல்லை.
இளங்கோவன் தெருவில் குழாய் உடைப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நிலையில் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர்.
இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலுமே குடிநீர் பிரச்சினை கடுமையாகி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் நிர்வாகத்தில் உள்ள நிலையில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தேவையான அக்கறை காட்டுவதில்லை.
மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளில் 90 சதவீத கிராம பஞ்சயாயத்துகளில் குடிநீர் ஆதார வறட்சி, குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது ஆகியவற்றின் காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமத்து பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று சிரமப்பட்டு குடிநீர் எடுத்து வருகின்றனர்.
வாரந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியின் போது கிராம மக்கள் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் அவர்களது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வந்த பாடில்லை.
நேற்று திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அயன்கரிசல்குளம், காரியாபட்டி யூனியனில் உள்ள சோலைகவுண்டன்பட்டி, வெம்பக்கோட்டை அருகே உள்ள கோட்டைப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 7 மாதங்களாக குடிநீர் மட்டும் இன்றி புழக்கத்துக்கு தேவையான தண்ணீரும் கிடைக்காத நிலையில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதால் இதற்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தனர்.
ஆட்சியரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
தற்போது உள்ள நிலையில் கடுமையாகிவரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வறண்ட இந்த மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவைப்படும் நிதியினை அரசிடம் இருந்து பெறுவதற்கு உரிய மதிப்பீடு தயாரித்து உடனடியாக அரசுக்கு அனுப்பி வைப்பதுடன் நிதி ஒதுக்கீடு கிடைப்பதற்கும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
