No bullet in Periya padi body... Rajasthan police statement

ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் உடலில் துப்பாக்கி குண்டு இல்லை என்றும், அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழக தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை, ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் போலீசார் விசாரித்து வருகிறார். விசாரணை அதிகாரியான ஜெய்தரன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பவன்லால் சவுத்ரி இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உயிரிழந்த பெரியபாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை என்றும், அந்த குண்டை தீவிரமாக தேடி வருவதாகவும் பவன்லால் சவுத்ரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், துப்பாக்கி சூட்டில் பலியான பெரியபாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்ல என்றும், சம்பவம் நடந்த இடத்தை முழுவதுமாக சோதனையிட்டும், அந்த குண்டு எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பெரியபாண்டியன் மரணம் தொடர்பான விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் தவறானது என்றும் கூறினார்.

பெரியபாண்டியனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை கிடைத்தால் மட்டுமே உண்மையிலேயே என்ன நடந்தது? என்பது தெரியவரும் என குறிப்பிட்ட பவன்லால் சவுத்ரி, துப்பாக்கி சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தது குறித்த வழக்கே எங்களுக்கு முக்கியமானது என கூறினார்.

ராஜஸ்தான் போலீசாரைப் பொறுத்தவரை துப்பாக்கி சூட்டுக்கு நாதுராம் காரணமாக இருக்கமுடியாது என்றே நினைக்கிறோம் எனவும். தேஜாராமின் குடும்பத்தினர் மற்றும் தனிப்படை போலீசார் இடையே சண்டை நடந்தபோது, தவறுதலாக குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்து இருக்கலாம் என்றும் பவன்லால் சவுத்ரி தெரிவித்தார்.