சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலியான வழக்கில் லாரி டிரைவர் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை செல்லாமாள் கல்லூரியில் படித்து வந்த காயத்திரி, சித்ரா, ஆஷா சுருதி, ஆகிய 3 மாணவிகள் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரி செல்லும் போது, அந்த வழியாக வந்தபோது தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 மாணவிகளும் பலியாகினார். மேலும், மீனா, ஒமன குட்டன் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக மீனா அளித்த புகாரின் பேரில் ஓட்டுனர் ராஜேந்திரன், கிளினர் மாயக்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமின் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி நசீர் அகம்மது முன்னிலை விசாரணைக்கு வந்தபோது அதிவேகமாகவும், கவனகுறைவாகவும் லாரியை ஓட்டி சென்றதால் தான் 3 மாணவிகள் இறந்ததாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து லாரி கிளினர் மாயகண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் (விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்) வழங்கியும், ஓட்டுனர் ராஜேந்திரன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.