கரூர்,
மூன்று ஆண்டுகளாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து, கோரிக்கை மனுக்களை மாலையாக போட்டுக்கொண்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க இளைஞர் ஒருவர் வந்தார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கடவூர் ஒன்றியம் வடம்பாடி கிராமத்தை சேர்ந்த வீரபொன்னுசாமி (30) என்பவர் தனது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாலையாக போட்டுக்கொண்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க, இந்த கூட்டத்திற்கு வந்தார்.
இதுகுறித்து வீரபொன்னுசாமி கூறியதாவது:
“வடம்பாடி அம்பேத்கார் நகரில் பேருந்து வசதி இல்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2013–ஆம் ஆண்டு முதல் மனு கொடுத்து வருகிறேன். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே, நான் ஏற்கனவே கொடுத்த மனுக்களை மாலையாக போட்டுக்கொண்டு அதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மனு கொடுக்க வந்து உள்ளேன்” என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றார். அப்போது அவரை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி கழுத்தில் போடப்பட்டு உள்ள கோரிக்கைகள் மனுக்களை கழற்றி விட்டு ஆட்சியரிடம் மனு கொடுங்கள் என்று கூறினர். அதன்பிறகு அவர் அதை கழற்றி விட்டு மனு கொடுத்தார்.
