Asianet News TamilAsianet News Tamil

என்எல்சி விவகாரம்: பாமக கூறுவதை ஏற்க முடியாது - கே.பாலகிருஷ்ணன்!

என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

NLC should be protected says CPIM state secretary balakrishnan
Author
First Published Jul 30, 2023, 12:07 PM IST

கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “நாடாளும‌ன்ற  முடக்கம், மணிப்பூர் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் ஏராளமான பணிகள் உள்துறை அமைச்சருக்கு உள்ளது. ஆனால், அதனைவிடுத்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும்  நடைபயணத்தை துவக்கி வைக்கின்றார். இதன் மூலம் பாஜகவினர் நாட்டை விட கட்சியை பலப்படுத்தவே நினைக்கின்றனர் என்பது தெரிகிறது. இது விநோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.” என்றார்.

மேலும், என்.எல்.சி நிறுவனத்தில் பாமக முற்றுகை போராட்டம் குறித்து பேசிய அவர், பாமகவின் முற்றுகை போராட்டம் வன்முறை போராட்டமாக வருத்தத்திற்குரியது. என்எல்சி நிறுவனம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதனை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்காக போராடக்கூடியவர்கள் தான் என தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், என்எல்சி இழுத்து மூடப்பட வேண்டும்,அப்புறப்படுத்த வேண்டும் என பாமக கூறுவது ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2ஆவது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தியும், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

'3 சென்ட் நிலம் பாருங்கண்ணா': ஆன் தி ஸ்பாட்டில் பாஜக நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அண்ணாமலை!

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட பாமகவினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios