NLC Contract workers attempt suicide attempt
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி என்.எல்.சி.யில் சுரங்கம் 1ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 வருடங்களுக்கு மேலாக சிலர் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்தது என்.எல்.சி. நிர்வாகம்.

பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். பணியிட மாற்றம் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு முறை போராட்டத்தின்போதும், என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை நிறுத்த முயன்றது. ஆனால், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
கல்லுக்குழி, வாணாதிரபுரம், காட்டுக்கொல்லை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடு, நிலம் ஆகியவற்றை என்.எல்.சி. நிறுவனத்துக்காக வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் கிராமங்களைச் சேர்ந்த 41 பேர் சுரங்க தொழில் விரவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தாங்கள் கொண்டு வந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு புதுச்சேரி மகாத்மா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
