NLC நிறுவனத்திற்கு 600 ஏக்கர் நிலம் தந்தவருக்கு வெண்கல சிலை - யார் இந்த டி.எம். ஜம்புலிங்கம் முதலியார்?
நெய்வேலியில் செயல்பட்டு வரும் பிரபல NLC நிறுவனம், அது உருவாக காரணமாக இருந்தவரும், அந்த நிறுவனத்திற்கு சுமார் 600 ஏக்கர் நிலத்தை கொடுத்த டி.எம் ஜம்புலிங்கம் முதலியாருக்கு தற்பொழுது வெண்கலத்தில் ஒரு முழு உருவ சிலை வைத்துள்ளது.

சரி யார் இந்த T.M ஜம்புலிங்கம் முதலியார்?
சுமார் 133 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருக்கண்டீஸ்வரம் என்ற ஊரில் பிறந்தவர் தான் ஜம்புலிங்கம் முதலியார். மிகப்பெரிய செல்வந்தரான டி.வி மாசிலாமணி மற்றும் சொர்ணாம்பாள் உள்ளிட்டவர்களின் புதல்வனாக பிறந்த ஜம்புலிங்கம், கடலூர் மற்றும் அப்போதைய மெட்ராஸில் தனது படிப்பை முடித்துள்ளார்.
அவருக்கு 21 வயது ஆனபொழுது விஜயலட்சுமி அம்மாள், என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவருக்கு ஆறு பெண் குழந்தைகள் பிறந்தனர், மிகச் சிறந்த செல்வந்தராக மட்டுமில்லாமல் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட விவசாயியாகவும் திகழ்ந்து வந்துள்ளார் ஜம்புலிங்கம். அப்போதைய கடலூர் நகராட்சியின் சேர்மன்னாக இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இன்னும் பல அரசு பதவிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
சரி இவருக்கும் நெய்வேலியில் செயல்பட்டு வரும் NLC நிறுவனத்திற்கும் என்ன சம்மந்தம்?
முன்பே கூறியது போல, ஒரு முற்போக்கு சிந்தனை வாய்ந்த விவசாயியாக திகழ்ந்து வந்த ஜம்புலிங்கம், ஒரு முறை நெய்வேலியில் இருந்த தனது நிலத்தில், தண்ணீர் வேண்டி கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். அப்பொழுது தண்ணீருடன் கலந்து கருப்பு நிறத்தில் ஒரு திரவம் வெளியாவதை கண்டு ஆச்சரியப்பட்டு, அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கவனத்திற்கு அதை எடுத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அங்கு ஆராய்ச்சி நடத்த தனது சொந்த செலவில் ஒரு குழுவையும் ஏற்பாடு செய்துள்ளார்.
சில காலம் கழித்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜாஜியை நேரில் சந்தித்து இந்த நிலக்கரி குறித்தான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆனால் அப்போதைய அரசாங்கம் அதை பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், அந்த விஷயத்தில் ஜம்புலிங்கத்திற்கு உதவியாக களம் இறங்கி உள்ளார் கர்மவீரர் காமராஜர்.
ஆம் கர்மவீரர் காமராசர் தான், முதல்வரிடம் இதைப்பற்றி பேசி, மேலும் அந்த நிலக்கரி விஷயத்தை அப்போதைய இந்திய பிரதமர் நேரு வரை கொண்டு சேர்த்துள்ளார். காமராஜரின் வழியாக இந்த விஷயம் பிரதம மந்திரி வரை சென்றாலும், அந்த நிறுவனம் துவங்க (அப்போதே) 150 கோடி தேவைப்பட்டதால், அரசு அந்த நிறுவனத்திற்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டது.
இறுதியில் அதில் உள்ள சிக்கலை தெரிந்து கொண்ட ஜம்புலிங்கம், தனக்கு சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை அப்போதைய நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். காமராஜர் ஆட்சியில் அது என் எல் சி லிமிடெட் என்ற பெயரும் பெற்றது. அன்று ஜம்புலிங்கம் அளித்த 620 ஏக்கர் நிலம், இன்றைய காலகட்டத்தில் சுமார் 2500 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நமது தென்னிந்தியாவின் 90% மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது, அன்று ஜம்புலிங்க முதலியார் துவங்கி வைத்த என்எல்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவடைக்கு தயாரான.. பயிர்களை நாசம் செய்த என்எல்சி - வார்னிங் கொடுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்