தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஆறு வழிச்சாலை... ரூ. 200 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
தூத்துக்குடி துறைமுகத்துக்கான போக்குவரத்தை மேம்படுத்த அங்கு ரூ.200 கோடி செலவில் ஆறு வழிச் சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடல்வழி போக்குவரத்திற்கு முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது தூத்துக்குடி. அங்குள்ள துறைமுகத்தில் இருந்து தான் ஏராளமான வெளிநாடுகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டும், அங்கிருந்து வரும் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்திற்கான போக்குவரத்தை மேம்படுத்த அப்பகுதியில் ஆறு வழிச்சாலை அமைத்திட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் ஆறுவழிச்சாலை அமைத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் மொத்தம் 5.16 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த 6 வழிச் சாலை அமைக்கப்பட இருப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆறுவழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்
ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து மேம்படுவதோடு வர்த்தகமும் அதிகளவில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆறு வழிச்சாலையை அமைத்திட தூத்துக்குடி எம்.பி கனிமொழி தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. விரைவில் இந்த 6 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கச்சத்தீவில் புத்தர் சிலையா? இது மிகப்பெரிய அச்சுறுத்தல்.. உளவு பார்க்க வாய்ப்பு.. அலறும் ராமதாஸ்..!