Nithyananda disciples who were once again worshiping in the coral Guards to drive away
திருவண்ணாமலை பவளக்குன்றில் நித்தியானந்தா சீடர்கள் மீண்டும் வழிபாட்டில் ஈடுபட்டதால் அங்குவந்த காவலாளர்கள் அவர்கள் அனைவரையும் விரட்டி அடித்தனர். மேலும், அங்கிருந்து செல்ல மறுத்த இரண்டு பெண்கள் உள்பட சீடர்களை அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழமை வாய்ந்த பவளக்குன்று மலை உள்ளது. மலையின் அடிவாரத்தில் மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தா சீடர்கள் மலையில் பல ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். மேலும் அங்கு தென்னங்கீற்றால் ஆன ஆசிரமம் அமைத்து, அதில் மூன்று சிலைகள் வைத்து வழிபாடும் செய்தனர். இதனையடுத்து மக்கள் அப்பகுதிக்குச் செல்ல நித்தியானந்தா சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையில் அங்கு முள்வேலி அமைப்பதற்கான கம்பிகள் மற்றும் கற்கள் மலைக்கு கொண்டுவரப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் மலையில் முள்வேலி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நித்தியானந்தா சீடர்களுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள், திருவண்ணாமலை உதவி ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் புகார் அளித்தனர். அதன்பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் பவளக்குன்று மலைக்கு நேரில் சென்று நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்து கட்டிருந்த ஆசிரமத்தை அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று புரட்சித் தமிழர் கட்சி, அம்பேத்கர் தேசிய கட்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் உரிமை கூட்டமைப்பு, நித்தியானந்தா சீடர்கள் மற்றும் சிலர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “பவளகுன்றில் உள்ள சதாசிவர் பாறையை வழிபாடு செய்து வரும் நித்தியானந்தா பீடத்தை சேர்ந்தவர்களை காவலாளர்கள் விரட்டியதோடு இல்லாமல், அந்த இடத்தில் உள்ள பாறையை உடைத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நித்தியானந்தா பீட சீடர்கள் தொடர்ந்து ஆன்மிக வழிபாடுகள் நடத்திட வழிவகையும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் பவளக்குன்று மலைக்குச் சென்று சதாசிவர் பாறையில் வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருவண்ணாமலை நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட நித்தியானந்தா சீடர்களையும், மக்களையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
அப்போது நித்தியானந்தா சீடர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து காவலாளர்கள் அவர்களை பவளக்குன்று மலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு அழைத்து வந்து அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
