Nirmala Devi husband is demanding divorce

மாணவிகள் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியின் கணவர் சரவண பாண்டியன் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று 4-வது நாளாக விசாரணை நடத்துகின்றனர்.

நிர்மலா தேவியின் கணவர் சரவண பாண்டியன். இவர் ரயில்வேயில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். நிர்மலாவுக்கும் சரவணபாண்டியனுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சரவண பாண்டியன் இரண்டாவது முறையாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இது குறித்து சரவண பாண்டியனின் உறவினர் ஒருவர் கூறுகையில், நிர்மலா தேவியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த சரவண பாண்டியன், அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த நிர்மலா தேவி கடந்த ஆண்டு திடீரென மாயமாகி விட்டார். ஒரு மாதமாக அவர் வீடு திரும்பாததை அடுத்து, அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அப்போது நிர்மலா தேவி மும்பையில் உள்ள ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்திருப்பது தெரிய வந்தது. அவரை உறவினர்கள் சமாதானம் செய்ததன் பேரில் ஊர் திரும்பினார். ஆனாலும், அவர்களுக்குள் மன ஒற்றுமை ஏற்படவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து சண்டையும் சச்சரவுகளும் ஏற்பட்டு வந்துள்ளது.

மகள்களைக் கூட்டிக் கொண்டு எங்காவது தலைமறைவாகி விடுவேன் என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் நிர்மலா தேவி பலமுறை
கணவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். குழந்தைகளின் நலனைக் கருதி, சரவண பாண்டியன் அமைதியாக பொறுத்துப் போனார். தனது 2-வது மகள் பள்ளி படிப்பு
முடிந்ததும் அவரை வெளிநாடு அழைத்துச் செல்லவும் சரவண பாண்டியன் திட்டமிருந்தார்.

தொடர்ந்து நிர்மலா தேவியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் சில மாதங்களாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அதோடு, நிர்மலா தேவியிடம் சேர்ந்து 2-வது முறையாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் சரவணபாண்டியன் மீண்டும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.

சரவணபாண்டியனின் வழக்கறிஞர் ராம்குமார் கூறும்போது, நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளிவருவதற்கு முன்னரே, சரவண பாண்டியன் விவசாரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். தற்போது மிகுந்த மன உளைச்சலில் அவர் உள்ளார். இம் முறை எப்படியும் விவாகரத்துப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் சரவண பாண்டியன் உள்ளதாக வழக்கறிஞர் கூறினார்.