Nirmala Devi affair Assistant Professor Murugan arrested

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை, சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பசாமி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இன்று 4-வது நாளாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒருபக்கம் சிபிசிஐடி அதிகாரிகளும், மறுபக்கம் ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்மலா தேவியிடம், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, யாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் பேசினீர்கள்? என்று கேட்டபோது, காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முரகன் ஆகியோர்தான் ஆசை வார்த்தைக் கூறி தன்னை தூண்டியதாக கூறியிருந்தார்.

காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சிபிசிஐடி குழுவின் ஒரு தரப்பு, சோதனை நடத்தியது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிர்மலா தேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் முருகன், முன்னாள் மாணவர் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் முருகனை, சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். இதே புகாரில் தேடப்பட்டு வரும் முன்னாள் மாணவர் கருப்பசாமியை தேடும் பணியும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.