Nilgiris Collector is the reason for this Everyone will appreciate him - says Vivek ...
நீலகிரி
நீலகிரி ஆட்சியர் எடுத்த முயற்சியால் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று நடிகர் விவேக் வெகுவாக பாராட்டினார்.
வருடந்தோறும் ஜூன் மாதம் 5–ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் தினத்தன்று பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரும் சுற்றுச்சூழல் தினமான நேற்று வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்-க்கு தடை என்று அறிவித்தார்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.
ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஸ்டீபன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் நடிகர் விவேக் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அதன்பின்னர் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடிகர் விவேக் பேசினார்.
அதில், "முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அவர் வழியில் தமிழகம் முழுவதும் 30 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தற்போது நீலகிரி மாவட்டத்தில் 5000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
ஆலய வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்களில் மரக் கன்றுகளை நட்டால், மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படும்.
நீலகிரி ஆட்சியர் எடுத்த முயற்சியால் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது இளைஞர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், இளைஞர்களே ஆறு, குளங்களை தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.
மாணவர்களாகிய நீங்கள் ஊட்டியில் லூட்டி அடித்து, அதன் பியூட்டியை பாதுகாக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவில், "மரக்கன்றுகளை நடுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், உதவி வனப்பாதுகாவலர் சரவணன், ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, புனித ஸ்டீபன் ஆலய குருக்கள் ரமேஷ்பாபு, ஜெரோம் மற்றும் சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளி மாணவ – மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
