சென்னையில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய பெண் கைது; ரூ.5.75 லட்சம் கொகைன் பறிமுதல்
சென்னை தாம்பரம் அருகே கொகைன் என்ற போதைப் பொருளை விற்பனை செய்த நைஜீரிய நாட்டுப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான போதைப் பொருளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தாம்பரம் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் கானத்தூர் சுங்கச்சாவடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் அங்கிருந்த நபரிடம் சிறு பொட்டலம் ஒன்றை கொடுப்பதை பார்த்த காவல்துறைியனர் சந்தேமடைந்து அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
திருச்சியில் போதை ஊசிக்கு வாலிபர் பலி - 2 பேர் கைது மூவர் ஓட்டம்
அவர்களது விசாரணையில் அப்பொன் நைஜீரிய நாட்டை சேர்ந்த 30-வயதான ஆன்யனி மோனிகா என்பதும் அவர் கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரியில் தங்கியுள்ளதாக தெரியவந்தது. மேலும் விசாரணையில் தனது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை அப்பல்லோ மருத்துவமனைக்கு உடன் வந்ததாகவும், அவர் சிகிச்சை முடிந்து நைஜீரியா சென்றுவிட்டதாகவும் வேலை இல்லாத காரணத்தால் நைஜீரியாவில் இருந்து ஒரு நபர் மும்பை கொண்டு வந்து கொடுக்கும் கொகைன் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததாக கூறியுள்ளார்.
ஒரு கிராம் கொகைன் 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி 5 ஆயிரத்திற்கு விற்பதாக கூறினார். பின்னர் அவரது பையை சோதனை செய்ததில் ஒரு கிராம் வீதம் 72 சிறு சிறு பாக்கெட்டுகள் கொகைன் இருந்தது. மேலும் கொக்கைன் விற்ற பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி கானத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கானத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நைஜீரியா நட்டு பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.