வெளிநாடிலிருந்து வந்திருக்கிறேன் ஆயிரக்கணக்கில் பணம் இருக்கிறது. பிச்சைக்காரனாக திரிகிறேன் சாதாரண சிலவுகள் கூட செலவழிக்க முடிவில்லை என வெளிநாட்டினர் சொல்கின்றனர்.
மோடியின் புதிய அறிவிப்பால் இந்திய மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. பொதுவாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் அந்நிய செலவாணி முறையில் டாலர்களையோ அல்லது அவர்கள் நாட்டு பணத்தை கொடுத்து இந்திய ரூபாய்களாக மாற்றிகொள்வார்கள்.
அவ்வாறு மாற்றிகொள்ளும் பணம் தவிர தனது கையில் கொண்டுவரும் அவர்கள் நாட்டுபணத்தை இந்தியாவில் மாற்றிக்கொள்ள அந்நிய செலவாணி மையத்தில் மாற்றிக்கொள்வார்கள்.இது தவிர கிரெடிட் கார்டுகளும் பயன்படுத்துவார்கள்.

செல்லாத நோட்டு அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டதில் வெளிநாட்டினரும் அதிகம். இந்தியாவில் சுற்றுலா மருத்துவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இது அதிகம் . ஆகவே மருத்துவத்துக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னை வருகின்றனர்.
அவர்கள் தங்குமிடம் மற்ற தேவைகளுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தினாலும் அடிப்படை செலவுகளுக்கு நம்ம ஊர் பணத்தை பயன்படுத்த வேண்டும் அவ்வாறு வந்தவர்கள் சென்னையில் சாதாரண செலவுகளுக்கே அல்லாடும் நிலையை வருத்தமுடன் நம்மிடம் பதிவு செய்தனர். நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் சாமுவேல் இவர் தனது தந்தைக்கு சிகிச்சைக்காக அடையாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பணம் செல்லாது என்ற அறிவிப்பால் சாதாரண செலவுகளுக்கு கடுமையாக திண்டாட வேண்டி உள்ளதாக சாமுவேல் தெரிவித்தார். மருந்துவாங்க முடியவில்லை, வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. என்னிடம் கத்தை கத்தையாக ஆயிரம் , ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் உள்ளன ஆனால் அதை வைத்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
வெளிநாட்டில் யாரையும் தெரியாமல் அனாதை போல் திரிய வேண்டி உள்ளது. எங்களுக்காக இந்திய தூதரகம் மூலம் எதாவது சிறப்பு ஏற்பாடுகள் செய்யலாம் அல்லவா என்று கேட்டார்.
இதே நிலைதான் மலேசியாவிலிருந்து குடும்பத்துடன் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ள மலேசிய தமிழர் சஹாதேவுக்கும் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன் இந்த திடீர் அறிவிப்பால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். எல்லா இடத்திலும் கிரெடிட் கார்டு மூலம் பொருள் வாங்க முடிவதில்லை.
எங்குமே வெளியில் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கிறோம். கத்தை கத்தையாக காசிருக்கு ஆனால் பிச்சைக்காரனாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். வெளிநாட்டினருக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில் குறைந்த பட்சம் அவர்கள் நாட்டு தூதரகங்கள் மூலமாகவாவது அரசு அதிகாரிகள் இந்த பிரச்சனை தீர்க்க வழி செய்யலாம். எங்கே சாதாரண ரேஷன் கடை கிளர்க் மனநிலையில் தான் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர் என்று இதை பார்த்த ஒருவர் தலையில் அடித்து கொண்டார்.
