தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.. இதையொட்டி இன்று பரவலாக பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். இந்தாண்டு வானிலை ஆய்வு மையம் கூறியபடி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தென் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி வீசியதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும். அல்லது அதை விட 10 சதவீதம் குறைவாக பெய்யும்.

வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் 67 செ.மீ. மழை பெய்தது. இது வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு 39 செ.மீ. முதல் 44 செ.மீ. மழை வரை பெய்யும் என்று நீண்ட கால வானிலை கணித்துள்ளது என்றார்.

இதற்கிடையில் வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் ஆந்திர கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாகவும், இது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பகுதிவரை இருப்பதாகவும் ஐதராபாத் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.