Asianet News TamilAsianet News Tamil

புத்தாண்டையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு; சீறிய காளைகளை கட்டி அணைத்த வீரர்கள்…

new years-jallikattu-bulls-and-players-embracing
Author
First Published Jan 2, 2017, 8:06 AM IST


புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் கட்டி அணைத்து புத்தாண்டை வரவேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே மலம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சவேரியார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டமானது சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் தொடங்கியது. அன்று இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது

இதில் மலப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு புத்தாணடை மகிழ்வுடனும், ஒற்றுமையுடனும் வரவேற்றனர். அதனை தொடர்ந்து சவேரியார் ஆலயத்தில் நேற்று காலை ஊர் மக்கள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு புத்தாண்டிற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். உயர்நீதிமன்ற தடை உத்தரவால் கடந்த ஆண்டு இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஆனால், நேற்று காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 27 ஜல்லிக்கட்டுக் காளைகள் கொண்டுவரப்பட்டன. அந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

மைதானத்தில் காளைகள் சீறிபாய்ந்து சென்றபோது இளைஞர்கள் காளைகளை ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காளையை கட்டி அணைத்தனர்.

வருகிற பொங்கலில் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகவேண்டும் என்று மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. யார் தடுத்தாலும் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்றும் மக்கள் மிகுந்த தைரியத்துடன் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios