புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம் : வாகன சாகசத்தில் ஈடுபட்ட 400 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட முயன்ற 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
புத்தாண்டை கொண்டாடுவதற்காக மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் வழக்கம்போல இந்த ஆண்டும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சரியாக 12 மணி அளவில் கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து கோஷங்களை முழங்கி புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, இனிப்புகளை பறிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஏராளமான இளைஞர்கள் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் நகர் முழுவதும் அதிவேகத்தில் சுற்றி வந்தனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் பலர் கீழே விழுந்து மற்றும் விபத்தில் காயமடைந்தனர்
இவ்வாறு காயமடைந்தவர்களில் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
