புத்தாண்டு கொண்டாட்டம் : பாதுகாப்பு நடவடிக்‍கைகள் தீவிரம்!

புத்தாண்டை முன்னிட்டு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், சென்னையில் அரசு மற்றும் தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதனை வரவேற்கும் விதத்தில், சென்னையின் பல்வேறு இடங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்வார்கள் என்பதால், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், சென்னையில், அரசு மற்றும் தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான, மெரீனா கடற்கரை சாலை, வாலாஜா சாலை, சாந்தோம் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களை மையமாக கொண்டு, 31 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்படவுள்ளன.

மேலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டையொட்டி, மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் 108 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன.

அதிக அழைப்புகளை கையாளும் விதத்தில், 108 அவசரகால சேவையின் மையக்கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதல் பணியாளர்கள் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகமானோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துச்செய்திகளை பரிமாறும்போது, அவசரகால தொலைத்தொடர்பு பாதிக்காமல் இருக்க Walky-Talky தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

108 மற்றும் 100 கட்டுப்பாட்டு அறைகள் ஒருங்கிணைக்‍கப்பட்டு, அதி விரைவாக செயல்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

போக்‍குவரத்தில் மாற்றம்

இதனிடையே புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் மக்கள் கூடுவார்கள் என்பதால், வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-வது அவென்யூவில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை எந்த வாகனங்களூம் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்‍க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்‍கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்தில், புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், இன்று மாலை 6 மணி முதலே வாகனங்களை அதற்குரிய இடங்களில் நிறுத்துவதற்கும், மது அருந்திவிட்டு வருவோரை கண்காணிப்பதற்கும் அதிகாரிகளுக்‍கு எடுத்துரைக்‍கப்பட்டுள்ளது.