அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான நாமக்கல்லை சேர்ந்த காண்டிராக்டர் சுப்ரமணியம் தற்கொலைக்கு முன்பு 13 பேருக்கு கடிதம் எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான நாமக்கல்லை சேர்ந்த காண்டிராக்டர் சுப்ரமணியம். கடந்த 3 ஆம் தேதி  செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை கொண்டார்.

கடந்த மாதம் 7-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், குவாரிகளில் வருமான வரி சோதனை நடந்த போது அவரது நெருங்கிய நண்பர்  நாமக்கல் சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சுப்ரமணியத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சுப்ரமணியம் கூறியதால் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

அவரது வங்கி கணக்குள் முடக்கப்பட்டு அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சுப்ரமணியனை விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் சில முக்கிய புள்ளிகள் உண்மைகளை சொல்லக்கூடாது என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகள், தொழில் துறை நண்பர்கள் என பலரும் என்னை பற்றி ஏதும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சொல்லி விடாதீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.

மேலும், தற்கொலை செய்வதற்கு முந்தைய நாளான 7-ந் தேதி பண்ணை வீட்டில் உள்ள மரத்தடியில் பல மணி நேரம் அமர்ந்து கடிதம் எழுதியதாக கூறி உள்ளார். அந்த கடிதம் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதப்பட்டதா? அல்லது 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டியிருந்ததால் அதற்காக விளக்கம் ஏதும் எழுதினாரா? என்பது மர்மமாக இருந்ததை நிலையில், சுப்ரமணியம் தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், சுப்பிரமணியம் தற்கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சத்யமூர்த்தி நியமிக்கபட்டுள்ளார். சத்யமூர்த்தி இன்னும் சற்று நேரத்தில் நாமக்கல் வரவுள்ளதாகவும், நாமக்கல்லில் ஏற்கனவே விசாரணை நடத்தி கொண்டிருக்கும் ஏடிஎஸ்பி செந்திலிடம் இருந்து விசாரணை ஆவணங்களை பெற்று விசாரணையை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, சுப்ரமணியம் தற்கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. சுப்ரமணியம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்  13 பேருக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

முதலமைச்சருக்கும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவருடைய நெருங்கிய நண்பர் ஐந்து பேருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ள சுப்ரமணியம்,வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கும் 13 கடிதங்களை அனுப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பண வினியோகம் முறைகேடுதான் சுப்ரமணியம் உயிரிழக்க காரணமாக உள்ளது என்று சிபிசிஐடி போலீசார் விசாரணையில்  தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.