பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமும், பொங்கல் பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, பரமத்திவேலூர் அருகே சேளூர் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள்.

இந்நிலையில் இந்த ஊராட்சியில் ஓர் இடத்தில் வைத்து, பொதுமக்களுக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. விஏஓ கலைச்செல்வி, ஊராட்சிச் செயலாளர் ரவி ஆகியோர் பொருள்களை வழங்கினர்.

அப்போது வேட்டி, சேலை வாங்க வந்த பொதுமக்களிடம் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை செலுத்தினால் மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் எனக் கூறி வீட்டு வரி வசூலித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அருகில் உள்ள நியாயவிலைக் கடையும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் தாங்கள் வீணாக அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி கிராம மக்கள் திரும்பிச் சென்றனர்.