தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

மருத்துவக் படிப்புக்கான இடங்களை  ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்தத் தேர்வினால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகத்தில் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீட்  தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கும் சட்டத்தை ஏகமனதாக சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.  அது அப்படியே இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தமிழக அரசின் சார்பில் பிரதமரை சந்தித்து நீட் தேர்வுக்கு  விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நீட்  தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை நீக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா?, அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா? என சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலாசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.