சென்னை தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 36 பேர், 7 முதல் 8 குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் கொழுக்குமலை-குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்ட 4 பேர் சென்றுள்ளனர். அப்போது மாலை 4 மணியளவில் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 40 பேரும் சிக்கினர்.

இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் மீட்புப்பணிகளை தொடர முடியாததால், மீட்புப்பணி மீண்டும் காலையில் தொடங்கியது. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தால் பலியான விவேக். புது மாப்பிள்ளை ஆவார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆஸ்பத்திரி வீதியைச்சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் திவ்யா இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது. பலியான விவேக் என்ஜீனியர் ஆவார். இவரது தந்தை பெயர் நடராஜன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

மலையேற்ற பயிற்சிக்கு தேனி வனப்பகுதிக்கு மனைவியுடன் புதுமாப்பிள்ளை விவேக் சென்றிருந்தார். அங்கு பிடித்த காட்டுத்தீயில் விவேக் கடுமையாக சிக்கி கொண்டு உயிரை இழந்தார். மனைவி திவ்யா தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தீ விபத்தில் விவேக் கருகி பலியான சம்பவம் கிடைத்ததும் கவுந்தப்பாடியில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.