சுங்குவார்சத்திரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், திருமங்கலம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டுக் குப்பைக் கூடாரமாக காட்சியளிக்கிறது.
இதனால் அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா என்கிற என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரபல பன்னாட்டு தொழிற்சாலைகள் உள்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் சுங்குவார்சத்திரம் பகுதிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இது தவிர சுங்குவார்சத்திரத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவர சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் அளவுக்கு போதுமான இடவசதி இல்லை. இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சாலையிலே நிற்க வேண்டியுள்ளது. மேலும், நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, சுங்குவார்சத்திரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டு, இதற்காக அங்குள்ள உழவர் சந்தையின் பின்புறம் அரசுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தற்போது திருமங்கலம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால், அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், பேருந்து நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் நிழற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
