சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் 16வது நடைமேடை அருகே 7 மாத பச்சிளம் குழந்தை சடலத்தை துப்புரவு பணியாளர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் புற நகர் ரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 16வது நடைமேடை அருகே மணலில் அட்டை பெட்டியில் பச்சிளம் குழந்தை உடல் முழுவதும் ஈக்கள் மொய்த்தபடி இருந்தது.

இதை பார்த்த துப்புரவு பணியாளர்கள் ஓடி சென்று குழந்தையை மீட்டு சம்பவம் குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் ரயில் நிலையத்தில் அவசர உதவி மையத்தில் இருந்த மருத்துவர்களுடன் வந்து குழந்தையை சோதனை செய்தனர். அப்போது எந்தவித ஆகாரமும் இல்லாமல் பல மணிநேரம் கிடந்ததால் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சென்ட்ரல் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று 7 மாத பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து வீசிவிட்டு சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும், வீசப்பட்ட குழந்தை கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.