new 6 judges for chennai high court approved by president

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையோடு சேர்ந்து நீதிபதி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 75 ஆக உள்ளது. ஆனால் தற்போது 48 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணி புரிந்து வந்த பவானி சுப்புராயன், ஜெகதீஸ் சந்திரா, சுவாமிநாதன், எம்.தண்டபாணி, ஆதிகேசவலு, அப்துல் குதோஷ் ஆகிய 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டதையடுத்து சட்ட அமைச்சகத்தின் வாயிலாக பிரதமருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், பவானி சுப்புராயன், ஜெகதீஸ் சந்திரா, சுவாமிநாதன், எம்.தண்டபாணி, ஆதிகேசவலு, அப்துல் குதோஷ் ஆகிய 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைதொடர்ந்து இவர்கள் 6 பேரும் விரைவில் பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.