Neet Tourch Light used to check students Ear in Kovai

மாணவர்கள் நீட் தேர்வெழுதும் முன் அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவையில் ஒரு மையம் ஒன்றில் மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்த சம்பவமும் நடந்துள்ளது.

நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. 

நீட் தேர்வெழுதும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மையங்கள் கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வெழுதும் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். பிற மாநிலங்களில், மாணவர்கள் தேர்வெழுத பல்வேறு அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட 10 இடங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. கழுத்தில் அணியப்பட்டிருந்த செயின் மற்றும் தாலி, கைகளில் கட்டப்பட்டிருந்த கயிறு போன்றவற்றை மாணவர்கள் தேர்வெழுதும் முன்னர் அகற்றப்பட்டன.

கைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை, பிளேடைக் கொண்டு அகற்றினர். இதனால் சிலருக்கு கைகளில் கீறல்கள் ஏற்பட்டது. இந்த கைவலியுடன் மாணவர்கள் எப்படி தேர்வெழுதுவார்கள் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

நீட் தேர்வு மையங்களில், மாணவர்களுடன் வந்தவர்கள் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடு செய்யவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். குடிநீர் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தமிழ்நாட்டுக்கு அவமானம் என்றும் நெல்லையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டினார். மாணவிகள் தலையில் போடப்பட்டிருந்த ஹேர்பேண்டுகள் எடுக்கப்பட்டன, மாணவர்கள் அணிந்திருந்த பெல்டுகள் போன்றவைகளும் எடுக்கப்பட்டன. 

கோவை மாவட்டத்தில் மட்டும் நீட் தேர்வு 32 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். 

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவை மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணவர்களுக்கு நடத்தபட்டவையோ சற்று
வித்தியாசமான உள்ளது. அதாவது மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டது என்று மாணவர்களும், பெற்றோர்களும் சந்தேகம் எழுப்புகின்றன. ஆனால், இந்த சோதனை மாணவிகளுக்கு நடத்தப்படவில்லை.

இது போன்று மாணவர்களை வருத்தும் சோதனைகளை, அடுத்த வருடம் நடைபெறும் நீட் தேர்வின்போதும் தொடர வேண்டாம் என்று மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் மனம் நொந்து கூறியுள்ளனர்.