'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு குழப்பத்துக்கு தமிழக அரசு தான் காரணம் என்று  நீட்தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்தார்.

நீட் தேர்வு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் நளினிசிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் நடைபெற்ற குழப்பங்களுக்கு எல்லாம் தமிழக அரசுதான் முழு பொறுப்பு. அதுதான் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான நம்பிக்கையை முதலில் அளித்தது.

இனி நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை எல்லாம் நீட் தேர்வுயின் அடிப்படையில் நடைபெற இந்த தீர்ப்பு வழி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் முந்தைய வாதங்களின் போது மத்திய அரசு ஒரு தெளிவான நிலையை எடுத்ததாக தெரியவில்லை. இன்றுதான் இறுதியான ஒரு நிலைப்பாட்டினை அறிவித்தது. தமிழக அரசின் அவசர சட்டமானது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும்.

நீட் தேர்வினை பொறுத்த வரையில் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். அவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கைக்கு தகுதி பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.