மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் இந்த முடிவுக்கு நீதி கேட்டு தமிழகம் மட்டுமல்லாது சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் நீட் தேர்வு வேண்டவே வேண்டாம் என்று கூறி மாணவர்கள், இளைஞர்கள், அமைப்புகள் என பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்துள்ளது.

சென்னை, தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி வாயில் முன்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவி அனிதாவின் சொந்த ஊரான அரிலூரில் உள்ள கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்க 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தபால் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றும் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நீதி கேட்டும் கோஷமிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் நீட்தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடலூர் மாவட்டம், பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய சட்டக்கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களைக் கூறினர்.

மதுரை மற்றும் சேலம் மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். பேரணியின்போது, நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகளும், கோஷங்களும் எழுப்பிய வண்ணம் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தோர் என அனைவரும் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகம் மட்டுமல்லாது தலைநகர் டெல்லியிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.