வேலூர்

ஏரிகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க ஏதுவாக விரிஞ்சிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு வந்த பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளர் ச.ந.ச.மார்த்தாண்டன் மனு அளித்தார்.

அதில், “மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக இருந்து வரும் பாலாற்றிலிருந்து வெள்ளப்பெருக்கு காலத்தில் 100-க்கும் அதிகமான ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.

தற்போது பாலாற்றில் பல அடி ஆழத்துக்கு மணல் சுரண்டப்பட்டிருப்பதால், ஆறுகள் பள்ளமாகவும், ஏரிக் கால்வாய்கள் மேடாவும் இருக்கின்றன.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஏரிக் கால்வாய் தூர்வாரப்படாததால், மழைக் காலங்களில் பாலாற்றில் தண்ணீர் வந்தாலும் ஏரிகளுக்கு திருப்பி விட முடிவதில்லை. சதுப்பேரி, பெரிய ஏரி உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் திருப்பி விடும் வகையில், விரிஞ்சிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதோடு, ஏரிக் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுதவிர, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 330 மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டன. 

மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.