Neduvasal protest

முடிவுக்கு வராத நெடுவாசல் போராட்டம்… திட்டத்தை கைவிடும் வரை தொடரும் என எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் நெடுவாசல் போராட்டக்குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டத்தை தொடரப் போவதாக நெடுவாசல் குழுவினர் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக 17 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் மற்றும் நெடுவாசல் போராட்டக் குழுவினர் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவு நடைபெற்றது.

3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி., தரப்பில் பிடி கொடுக்காமல் பேசியதால் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் மக்களிடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் , பேச்சுவார்த்தை முழுமைபெறவில்லை என்றாலும் சுமுகமாக முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

நெடுவாசல் மக்களின் கருத்துக்களை பெட்ரோலிய அமைச்சரிடம் தெரிவிக்கஉள்ளதாகவும் , மக்கள் விரும்பினால், அவர்களையும் உடன் அழைத்து செல்லப் போவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.