வேலூர்

தமிழகம் மற்றும் ஆந்திரம் பகுதிகளில் ஊருக்குள் மர்ம நபர்கள் புகுந்ததால் பதற்றமடைந்த மக்கள் காவலாளர்களிடம் தெரிவிக்க, நக்சலைட்டுகளாக இருக்கலாம் என்று இரு மாநில எல்லையில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை காவலாளர்கள் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகில் தமிழக – ஆந்திர எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக – ஆந்திர எல்லை பகுதியான நாட்டறம்பள்ளியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிநகர் பகுதியில் தனியாக வீடு கட்டிக் கொண்டு செல்வி என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் செல்வியின் வீட்டு கதவை தட்டியுள்ளதால் அச்சமடைந்த செல்வி தனது செல்போன் மூலம் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக திம்மாம்பேட்டை காவலாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆந்திர மாநிலம் கொட்டாவூர் பஞ்சாயத்து சிவானந்தம் பகுதியை சேர்ந்த குமார் (15) என்பவர் தொட்டிகிணறு பலராமன் கொட்டாய் வழியாக காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இளைஞர் ஒருவர் திடீரென குமாரை தடுத்து நிறுத்தி சாப்பாடு வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு குமார் இங்கு எங்கும் இல்லை. 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டறம்பள்ளிக்கு சென்றால்தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

பிறகு குமாரிடம் அந்த இளைஞர், “எனக்கு சாப்பாடு வாங்கி கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்லுமாறு” கூறியுள்ளார். அவசர வேலையாக செல்கிறேன். “என்னால் முடியாது” என்று குமார் கூறவே, அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் பயந்து போன குமார் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பித்து வந்து ஊருக்குள் நடந்த சம்பவத்தை கூறினார்.

பின்னர் ஊரில் இருந்த சிலர் குமாரை அழைத்துகொண்டு அங்கு சென்று பார்த்தபோது அங்கு மோட்டார் சைக்கிள் மட்டும் இருந்தது. மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

மேலும், அன்று இரவு ஐந்து பேர் வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சாலையின் ஓரம் இருப்பதாக தகவலறிந்த ஊர்மக்கள் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் காட்டிற்குள் தப்பி சென்றுவிட்டனர். இதனால் பதற்றமடைந்த மக்கள் ஆந்திர மாநிலம் குப்பம் காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

குப்பம் காவல் ஆய்வாளார் ராஜசேகர் தலைமையில் 15–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமையில் தமிழக காவலாளர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து இரு மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை காவலாளர்கள் 50 பேர் வரவழைக்கப்பட்டு கூட்டாக இணைந்து தமிழக எல்லையான கூடுபள்ளம், அரங்கல்மலை, தகரகுப்பம், பெரும்பள்ளம், மல்லகுண்டா, வண்டிமேடு ஆகிய பகுதிகளிலும், ஆந்திர எல்லையான பொக்கல்ரேவ், பெரியஅடுகன்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகில் முகாமிட்டு மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நக்சலைட்டுகள் ஊடுருவல் இருக்கக்கூடுமா? என்றும் சிறப்பு நக்சலைட் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜய் தலைமையில் 15–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மநபர்கள் நடமாட்டத்தால் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஒட்டி அமைந்துள்ள தமிழக, ஆந்திர எல்லைப்பகுதியில் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.