கரூர்

நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படாததால் வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அருகே வாங்கல் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 43 பேருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

அப்போது, “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “சம்பளம் கிடைக்காத தொழிலாளர்களில் சிலருக்கு ஆதார் எண் இல்லாமல் இருப்பதாகவும், ஆதார் எண் இருந்தாலும் வங்கியில் இணைக்கப்படாமல் இருப்பதாலும் அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை” என அவர் தெரிவித்தார். மேலும், “உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் கூறினார்.

இதனையேற்று கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.