Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்; ஆறு வயது பெண் குழந்தை இறந்ததற்கு மாநில அரசே பொறுப்பாம்...

National Human Rights Commission to the Tamil Nadu Government The state government is responsible for the death of a six-year-old girl
National Human Rights Commission to the Tamil Nadu Government The state government is responsible for the death of a six-year-old girl
Author
First Published Jan 13, 2018, 12:13 PM IST


கோயம்புத்தூரில் மின்விசை தறி பட்டறையில் கடந்த 2014–ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி ஆறு வயது பெண் குழந்தை உயிரிழந்ததற்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

கோயம்புத்தூரில் மின்விசை தறி பட்டறையில் கடந்த 2014–ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி ஆறு வயது பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பான புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "கோவையில் மின்விசை தறி பட்டறை ஒன்றில் ஆறு வயது பெண் குழந்தை மின்சார விபத்தில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2014 செப்டம்பர் 1–ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட புகார் ஒன்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையில், மேற்படி தறி பட்டறை சட்ட விரோதமாக மின்சார இணைப்புப் பெற்று இயங்குவது குறித்து மாநில மின்துறை அதிகாரிகளால் சரியான முறையில் விளக்கம் தரமுடியவில்லை.

எனினும், இந்த தறி பட்டறையில் சட்ட விரோதமாக மின் இணைப்பை பயன்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்ப் பட்டறையில் உயிரிழந்த பெண் குழந்தையின் பெற்றோருக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்றோ அல்லது அவர்கள் அங்கு கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலோ அந்த பட்டறையில் எந்த ஆவணங்களோ, பதிவேடுகளோ இல்லை என்பதும் இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்த பெண் குழந்தை அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒரு தம்பதியின் குழந்தை என்றும், அந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் மூத்த மகளின் திருமணத்திற்காக சொந்த கிராமத்துக்குச் சென்றபோது இந்த குழந்தை பிணையாக பிடித்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

அப்போது அந்த குழந்தை தறி பட்டறையில் சட்ட விரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு உள்ள வயரைத் தொட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாடு மின்துறை வாரியத்தின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட சம்பவம் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது. மின்துறையின் அலட்சியத்தினால் விளைந்த இந்த மனித உரிமை மீறலுக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடாக  ரூ.3  இலட்சம் வழங்க ஏன் பரிந்துரைக்கக் கூடாது? என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது" என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios