தியேட்டரில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்கலையா..இனி அரெஸ்ட் கட்டாயம்..

சென்னையில் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.. கடந்த 5 தேதி முதல் இன்று வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

வடபழனி விஜயா ஃபோரம் மால் என்ற ஷாப்பிங் மாலில் உள்ள பாலஸோ திரையரங்கில் நேற்று நண்பகலில்க்ளோரி என்ற பல்கேரிய நாட்டுத் திரைப்படம் திரையிடப்பட்டது.

படம் தொடங்குவதற்கு முன்பு  தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்த ஸ்ரீலா, அவரது தாயார் உள்ளிட்ட சிலர் எழுந்து நிற்கவில்லை. இதனை வேறு சிலர் கண்டித்ததோடு, அவர்களை வெளியேற்றவும் முயற்சித்தனர்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து திரைப்படம் நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். எழுந்து நிற்காத 3 பேர் வட பழனி காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த மூவர் மீது 1971ஆம் ஆண்டின் தேசியச் சின்னங்களுக்கு அவமரியாதை செய்தலைத் தடுக்கும் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மூவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பர் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே கேரள எழுத்தாளர் ஒருவர் இதே பிரச்சனைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.