வெள்ளியணை,

வெள்ளியணை அரசுப் பள்ளியில் நம்மாழ்வார், காமராசர், அண்ணா, போன்ற பல்வேறு தலைவர்களின் பெயர்களை மரங்களுக்குச் சூட்டி மாணவ – மாணவிகள் வளர்த்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசுத் தொடக்கப்பள்ளி கடந்த 1926–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 155 மாணவ – மாணவிகள் மற்றும் ஆறு ஆசிரியர்களை கொண்டு நூற்றாண்டு விழாவை நோக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணவ – மாணவிகளும் கடந்த 2015–ஆம் ஆண்டு ஜூலை 27–ஆம் தேதியன்று மறைந்த அப்துல் கலாம் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு அதில் அவரின் பெயரை அட்டையில் எழுதி தொங்கவிட்டு வளர்க்கின்றனர்.

பின்னர், அந்த செயல் ஆசிரியர்களிடையே மாணவர்களுக்கு ஏட்டளவில் இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதை பாடமாக சொல்லித் தருவதோடு நின்று விடாமல் அதை செயல் வடிவம் பெற வைக்கத் தூண்டுகோலாக அமைந்தது.

அதன் விளைவாக மாணவர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டு அதை நட்டு பாதுகாப்புக் கூண்டு அமைத்து அவர்களுக்கு பிடித்த தலைவர்களின் பெயர்களை அதற்குச் சூட்டி வளர்க்க மாணவர்களிடையே ஆசிரியர்கள் ஆர்வத்தை ஊட்டினர்.

இதனால் இன்று இப்பள்ளியைச் சுற்றிலும் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், கல்வி கண் திறந்த காமராஜர், பேரறிஞர் அண்ணா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ, தேசத் தந்தை மகாத்மா காந்தி, அண்மையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உள்பட பல தலைவர்களின் பெயர்களை மரங்களுக்குச் சூட்டி வளர்க்கின்றனர். மேலும், அறிவியல் சாதனைகளைப் போற்றும் வகையில் மங்கள்யான் பி.எஸ்.எல்.வி.6 என்றும் பெயர்களை தாங்கி மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

மேலும், மாணவர்களின் பெற்றோர்களும் இத்திட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியதால் அவர்களும் மரக்கன்றுகளை நட்டு அவர்களுக்கு பிடித்தமான பெயர்களை சூட்டி வளர்க்கத் தொடங்கி உள்ளனர்.

மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சி சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் சீமை கருவேல செடிகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கி கூறியதன் விளைவாக தற்போது 2017 ஜனவரி 1–ல் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ – மாணவிகள் தங்கள் பகுதியில் கண்ணில் தெரியும் சிறிய சீமை கருவேல செடிகளை வேருடன் பிடுங்கி வந்து ஆசிரியர்களிடம் கொடுக்கின்றனர்.

இதனை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களும் கொண்டு வரும் செடிகளின் எண்ணிக்கையை குறித்து வைத்து பரிசு வழங்க இருக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து இப்பணியினை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்கள் வெங்கடேசன், மனோகரன் ஆகியோர் தெரிவித்ததாவது.

“இந்த மரம் வளர்க்கும் சேவையை புரிந்துக் கொண்ட இப்பகுதி பொதுமக்களும், இளைஞர் மன்றத்தினரும் சீர்மிகு சுற்றுச் சூழல் அமைய தங்களையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆர்வம் காட்டுவதால் விரைவில் மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகளை அழைத்து வந்து “பசுமையினால் நிரப்பு“ என்ற திட்டத்தைத் தொடங்க இருப்பதாகவும், இதன் மூலம் பள்ளி வளாகம் மட்டுமின்றி வெள்ளியணை ஊராட்சி பகுதிகளில் பொது இடங்களில் இந்த ஆண்டு முடிவிற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர் தாங்கிய மரக் கன்றுகளை நட்டு வளர்க்க இருப்பதாகவும், தொடர்ந்து 2026–ல் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்குள் தாந்தோன்றி ஒன்றியம் முழுவதும் பிற பள்ளி மாணவ – மாணவிகளையும் அந்த அந்தப் பகுதி பொதுமக்களையும் ஒன்றிணைத்து 1 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளது” என்றுத் தெரிவித்தனர்.

இப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த உன்னத முயற்சி வெற்றியடைய சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டு இருக்கிறது.