விஜய் மீது அழுக்கு..? காவு கேட்கும் பாஜகவின் வாஷிங் மெஷின்..? கதிகலங்கும் தவெக..!
விஜயையும் அப்படி மிரட்டி கூட்டணிக்கு இழுக்கக்கூடாது என கலங்குகிறார்கள் தவெக நிர்வாகிகள்.

‘‘எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவுக்கு எதிரானவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலமாக நெருக்கடி கொடுத்து மத்திய அரசு முடக்குகிறது. ஊழல் வழக்குகளோடு இருக்கிற எதிர்க்கட்சியினர் பாஜகவில் இணைந்து விட்டால் அந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு காலப்போக்கில் அது காணாமல் போகிறது. கிட்டதட்ட ஊழல் அழுக்குள்ள அரசியல்வாதிகள் பாஜக என்கிற வாஷிங் மெஷினுக்குள் போய்விட்டாலே அவர்கள் மீதுள்ள ஊழல் கறை போய் விடும்’’ என எதிர்கட்சியை சேர்ந்த பல முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் விஜய்க்கு சென்சார் மூலமாகவும், சிபிஐ மூலமாகவும் நெருக்கடிகள் கொடுத்து, பாஜக ஏதோ ஒரு ஒப்பந்தம் போட முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு குற்றச்சாட்டு முன் வைத்திருப்பது விஜயை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகத்தான் நெருக்கடிகள் தரப்படுகிறதா? திமுகவுக்கு செல்லும் சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்க, விஜய் மூலமாக பாஜக திட்டம் போடுகிறதா? கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடத்தப்படுகிறதா?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயின் கடைசி படம் சென்சார் பிரச்சினைகளுக்குள் சிக்கி, பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளி போடப்பட்டிருக்கிறது. மிகவும் செண்டிமெண்டாக பார்க்கிற தனது கடைசி படத்டதுக்கான சிக்கல் விஜய்க்கு அழுத்தத்தை கொடுக்க, கரூர் பெருந்துயர சம்பவ விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி, விஜய்க்கு சம்மன் அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் கேள்விகளுக்கான பதில்களை தரலாமா? என விஜய் கேட்டதாகவும், அதற்கு நேரில்தான் வரவேண்டும் என சிபிஐ அதிகாரிகள் கறாராகச்சொல்லி விட்டதால் 12ஆம் தேதி காலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்.
7 மணி நேரம் விஜயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் கிடக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. பேருந்து மீது நின்று பேசிக் கொண்டு இருந்தபோதே பலர் மயக்கம் அடைந்தது தெரிந்தும் மீண்டும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? சிலர் மயக்கம் அடைந்தபோது நீங்களே தண்ணீர் பாட்டில்களை கொடுத்தீர்கள்? அப்போதும் அதன் தீவிரத்தை ஏன் நீங்கள் உணரவில்லை? உயிர் பலி ஏற்பட்டும் ஏன் கிளம்பிச் சென்றீர்கள்? என பல கேள்விகள் தயாரிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் இத்தனை கேள்விகள் கேட்டு, அதற்கு விஜய் என்ன பதில் சொன்னார் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அதேசமயம் கரூர் சம்பவத்துக்கு தவெக பொறுப்பில்லை என விஜய் பல குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதாக தெரிகிறது. அதேசமயம் விஜய் விசாரணைக்கு போன நேரத்தில் சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜேபியாக இருந்தவரும், இப்போது ஆயுதப்படை டிஜிபியாகவும் இருக்கிற டேவிட்சன் ஆசீர்வாதம் மத்திய மண்டல பயிற்சியாளராக இருந்த நிர்மல் குமாரிடமும் விஜயிடம் கேட்ட கேள்விகளை ஒட்டியே கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் விஜயிடம் அரசியல் ஒப்பந்தம் போட பாஜக, சிபிஐ மூலம் முயற்சி செய்வதாகவும், பாஜகவின ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொண்டால் வழக்குகள் காணாமல் போய்விடும் என செல்வப் பெருந்தகை சொல்லி இருக்கும் பின்னணியை பார்க்க வேண்டி இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹிமந்தா பிஸ்வா இப்போது பாஜகவில் இணைந்து அசாம் முதல்வராக இருக்கிறார். சாரதா சிட் பண்ட் மோசடியில் ஹிமந்தா பிஸ்வா மீதும் குற்றச்சாட்டு எழ அவர் பெயரும் இணைக்கப்பட்டு இருந்தது. 2015-ல் பாஜகவில் சேர்ந்த அவர் முதல்வரான பிறகு விசாரணைக்கே அழைக்கவில்லை, அதேபோல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் பவர்ஃபுல் தலைவராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இப்போடு இவரும் பாஜகவில் இருக்கிறார். 2014-ல் சுவேணந்து அதிகாரி உட்பட பல தலைவர்கள் லஞ்சம் வாங்கியது ஒப்புக்கொண்ட வீடியோக்கள் வெளியாக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் திரிணாமுல் கான்கிரஸின் பல தலைவர்களை சிபிஐ கைது செய்தது. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. ஆனால் அதில் சுவேந்து அதிகாரி பெயர் இல்லை. 2022 மார்ச் மாதம் அஜித் பவார், அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அஜித் பவார் மீதான வழக்கு அமலாக்கத்துறையில் இருக்க, மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அஜித் பவார் நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் அஜித் பவார் பெயரே இல்லை. இப்போது அஜித் பவார், பாஜக கூட்டணி அரசாங்கத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருக்கிறார்.
ஆனால் எதிர்கட்சிகளில் இருக்கிற அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தேஜஸ்ஸ்ரீ யாதவ் என பலருக்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்குகள் பதிந்து நெருக்கடிகளை கொடுத்து கைது செய்யப்பட்டார்கள். 2023ல் வெளியான சில தரவுகளில் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட 127 தலைவர்களில் 85 சதவீதம் பேரும், சிபிஐவிசாரணைகள் இருந்த 200 தலைவர்களில் 80 சதவீதம் பேரும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்திருக்கிறது. மத்தியில் மோடி பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்துகிறடது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், 2023ல் மத்திய புலனாய் அமைப்புகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 14 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மாதிரியான அமைப்புகளை முறைகேடாக மத்திய அரசு பயன்படுத்தியது என்று எதிர்கட்சிகள் முறையிட்டிருந்தது. ஆனால், அந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கூடவே மத்திய விசாரணை அமைப்புகள் சட்டத்தின்படி செயல்படவில்லை என கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என சொல்லியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையும், மத்திய விசாரணை அமைப்புகளுடன் சுதந்திரத்தையும், அரசியல் சார்பற்ற செயல்பாட்டையும் உறுதி செய்து இருக்கிறது பாஜக கருத்து தெரிவித்தது.
அதே சமயம் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக பதியப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வுகளை எளிதாக கடந்து போய்விட முடியாது. மத்திய- மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற விசாரணை அமைப்புகளும், புலனாய்வு துறைகளும் குற்றங்களை தடுக்க பயன்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளையும், தனி நபர்களையும் பழிவாங்கவோ, பணிய வைக்கவோ பயன்படுத்தக்கூடாது என்பதே எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது. விஜயையும் அப்படி மிரட்டி கூட்டணிக்கு இழுக்கக்கூடாது என கலங்குகிறார்கள் தவெக நிர்வாகிகள்.
