Asianet News TamilAsianet News Tamil

பள்ளியின் அருகே நிர்வாணமாக விழுந்து கிடக்கும் குடிகாரர்கள்; சாராயக் கடையால் பெண்களுக்கு சங்கடம்; தீர்வு?

Naked drinkers fell down near school Embarrassment for women liquor shops
Naked drinkers fell down near school Embarrassment for women liquor shops
Author
First Published May 22, 2018, 7:03 AM IST


அரியலூர்
 
அரியலூரில் குடிகாரர்கள் போதையில் நிர்வாணமாக விழுந்து கிடக்கின்றனர் என்றும் பள்ளி அருகே இருக்கும் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில் மக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 286 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர். 

மக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், பெரிய வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வரதராஜன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். 

அதில், "அரியலூர் கொத்தவாசல் சாலையில், குடியிருப்பு மற்றும் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி, தனியார் மருத்துவமனை உள்ளது. இதனருகே 25 மீட்டர் தூரத்திலுள்ள டாஸ்மாக் சாராயக் கடையால் பள்ளி மாணவ - மாணவிகள், பெண்கள், மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

டாஸ்மாக் சாராயக் கடைக்கு வரும் குடிகாரர்கள், குடித்துவிட்டு பள்ளி அருகே தகாத வார்த்தையால் ஒருவருக்கொருவர் பேசி வருகின்றனர். மேலும், சிலர் அதிக குடிபோதையில், பள்ளி அருகே நிர்வாணமாக கிடக்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். 

எனவே, மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட பகுதியிலுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios