Asianet News TamilAsianet News Tamil

வைரமுத்துவை விமர்சித்த எச்.ராஜாவின் வீட்டை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை; 60 பேரை கைது செய்தது காவல்துறை...

naam Tamil party blockade of the house of H.Raja who criticized Vairamuthu Police arrest 60 arrested
naam Tamil party blockade of the house of H.Raja who criticized Vairamuthu Police arrest 60 arrested
Author
First Published Jan 11, 2018, 8:29 AM IST


சிவகங்கை

வைரமுத்துவை விமர்சித்த சிவகங்கையில் உள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 60 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில், ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சிற்கு விமர்சனம் செய்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதனையொட்டி எச்.ராஜா வீட்டின் முன்பும், கண்டனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் பல்கலைக்கழக சாலையில் ஒன்று திரண்டு கையில் கொடிகளுடன் எச்.ராஜாவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு அவரது வீட்டை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

இதனை அறிந்த காவலாளர்கள் நாம் தமிழர் கட்சியினரை பல்கலைக்கழக வளைவு அருகே தடுத்து நிறுத்தினர். இருந்தும், சிலர் காவலாளர்களின் தடுப்பை மீறி எச்.ராஜா வீட்டை நோக்கி சென்றனர்.

பின்னர், கூடுதல் காவலாளர்கள் வரவழைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். இதனால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பின்னர், முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், சிவகங்கை மாவட்ட பரப்புரையாளர் ராவணன் உள்பட 60 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios