கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்றால், நுகர்வோர் அதனைத் தட்டிக் கேட்டு தங்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி, தி பாத் குளோபல் பள்ளியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே பேசினார்.

“நுகர்வோர் என்ற தனி வகை எதுவும் இல்லை. நாம் அனைவருமே நுகர்வோர்தான்.
நாம் மளிகைக் கடைக்குச் சென்றால் நாம்தான் நுகர்வோர். அதே மளிகைக்காரர் மருந்து கடைக்குச் செல்லும்போது அவர் நுகர்வோராகிறார். நாம் அனைவருமே ஒவ்வொரு நேரத்தில் நுகர்வோராக மாறிவிடுகிறோம்.

பேருந்துப் பயணத்தின்போது நடு வழியில் உள்ள உணவகத்தில் பேருந்து நிறுத்தப்படும். அங்குள்ள கடையில் பிஸ்கெட், குளிர்பானம் வாங்கச் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பார்கள். இதை நாம் பெரிதாக நினைப்பதில்லை.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்க கடைக்காரருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட அனைத்து இடங்களிலும் போராட வேண்டும். பள்ளி மாணவர்களாகிய நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்” என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய நுகர்வோர் தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் கே.சாவித்திரி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

இதில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், வட்ட வழங்கல் அலுவலர் ரா.சுப்பிரமணியன், தொழிலாளர் நல ஆய்வாளர் க.ரவி ஜெயராம், பள்ளி முதல்வர் எஸ்.உமா மகேஸ்வரி, நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.