mystery people attacked forest department officers and theft Cell phone and bike

தருமபுரி

தருமபுரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினரை கல்லால் அடித்துவிட்டு அவர்களின் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவலாளார்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனப்பகுதியில் சிலர் மான்களை வேட்டையாடிவிட்டு வருகின்றனர் என்ற தகவல் மொரப்பூர் வனத்துறை அலுவலகத்திற்கு கிடைத்தது. 

அந்த தகவலின்பேரில் வனச்சரகர் கிருஷ்ணன், வனத்துறை ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் மத்தியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரும் உடனிருந்தார். 

அப்போது, அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் வந்தனர். அவர்களை வனச்சரகர் கிருஷ்ணன் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அவர்களது வாகனங்களையும் சோதனை செய்ய முற்பட்டார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கிருஷ்ணன், பாண்டியன் மற்றும் முருகேசனை சரமாரியாக தாக்கிவிட்டு கல்லைக் கொண்டும் அடித்தனர். மேலும், கிருஷ்ணனின் செல்போன், முருகேசனின் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். 

இதுகுறித்து வனத்துறையினர் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.