திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம் மற்றும் அரக்குறிச்சி ஆகிய இரண்டு வெவ்வேறு பகுதிகளில் வானில் இருந்து மர்ம பொருள். விழுந்தது. இவற்றை புவியியல் ஆராய்ச்சி குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ்சாயத்து களத்துக்காட்டு தோட்டத்தில் வானில் இருந்து ஒரு மர்ம பொருள் விழுந்தது.
பலத்த சத்தத்துடன் விழுந்த அந்த மர்ம பொருள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், மக்களிடம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அந்த பொருள் எங்கிருந்து இருந்து விழுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அது வெடிபொருள் இல்லை என்பதை மட்டும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து விமான பாதுகாப்புத்துறை மற்றும் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்பு கொண்டு மர்ம பொருளின் புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தது. அதை ஆய்வு செய்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருள் விமானத்தின் பாகம் இல்லை என்பதை அறிக்கையாக அளித்துள்ளனர்.
இதனால் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் விண்வெளியில் இருந்து விழுந்ததா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
ஆனால், இதுவரை விழுந்த அந்த பொருள் என்னவென்று உறுதி செய்யப்படாமல் கேள்விக் குறியாகவே இருக்கிறது. இதனால், தொடர்ந்து நீடிக்கிறது மர்மம்.
அந்த பொருள் என்னவென்று அறிவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் பொதுமக்கள்.
தற்போது, அந்த பொருள் ஒட்டன்சத்திரம் தாசில்தாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பல துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வரும், புவியியல் ஆராய்ச்சியாளருமான அன்பரசு தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஒட்டன்சத்திரம் வந்து, அந்த மர்ம பொருளை சோதனை செய்தனர். அதை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தனர். அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பயனுள்ள தகவல்களையும் அவர்கள் அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஒட்டன்சத்திரம் பகுதியில் விழுந்த மர்ம பொருள் என்னவென்று கண்டுபிடிப்பதில் தீவிரம்காட்டி வருகிறோம். இதுபற்றி பல துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இதே போல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கொளந்தபாளையம் என்ற இடத்திலும் சம்பவத்தன்று மர்ம பொருள் ஒன்று விழுந்தது. இதனால் இந்த இரண்டு பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறோம்’ என்றார்.
விண்வெளியில் இருந்து விழுந்ததா? என்றும் இஸ்ரோவை தொடர்புகொள்ள பரிந்துரை’ செய்யப்பட்டுள்ளதும் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளை ஆய்வு செய்த புவியியல் ஆராய்ச்சியாளர் அன்பரசு, திண்டுக்கல் செய்தியாளர்களிடம் கூறியது:
“நாங்கள் வானில் இருந்து விழும் எரிபொருள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ஒட்டன்சத்திரம் அருகே விழுந்த பொருளும், அப்படி ஏதாவது ஒரு வகையை சேர்ந்ததா? என சோதனை செய்தோம். ஆனால், அது மனிதனால் தயார் செய்யப்பட்ட ஒரு பொருள் ஆகும். சிலிண்டர் வடிவில் உள்ள அந்த பொருளை சுற்றி தீயிட்டு எரிக்க முடியாத வயர் போன்ற ஒன்று சுற்றப்பட்டு இருக்கிறது. அதன் உட்பகுதியில் வேதியியல் பொருட்களின் வாசனை வீசுகிறது.
இதனால், அது விண்வெளியில் இருந்து விழுந்து இருக்கலாம்? என கருதுகிறோம். அதாவது, விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் ஒரு செயற்கை கோளில் இருந்து உடைந்து விழுந்த பொருளாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதே போல, அரவக்குறிச்சி தாலுகாவில் விழுந்த பொருளை விரைவில் நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
