சென்னையில் விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு ரூ. 32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு திறக்கும் வங்கி மாலை 6 மணிக்கு மூடப்படும். இதற்கு காவலாக வேறு மாநிலத்தை சேர்ந்த காவலாளி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை வழக்கம்போல் வங்கி பூட்டப்பட்டு விட்டது. அடுத்த நாள் காலை வங்கி அதிகாரிகள் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வங்கியின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். அதில், அந்த வங்கியில் வேலை பார்க்கும் ஹவுஸ் கீபிங் வேலையாட்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என வலுத்த சந்தேகம் எழுந்தது. கொள்ளைக்கு பின் அவர் தலைமறைவாகிவிட்டார். 

இந்த கொள்ளை சம்பவத்தில் வெல்டிங் மூலம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் லாக்கரை உடைத்துள்ளது முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இது குறித்து சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் முதற்கட்டமாக ஹிலாராம், ஹர்பகதூரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். 

இவர்கள் இருவரும் இந்த திருட்டு நடக்க தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கித்தந்ததாக கூறப்படுகிறது.