கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த கேரளாவைச் சேர்ந்த நகைக் கடை அதிபர் மர்மமான முறையில் செத்துக் கிடந்தார். கொன்றது யார் என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் ஏரியில் கீழ்பூமிக்குச் செல்லும் வழியில் நேற்று ஆண் ஒருவர் சடலமாக கிடைப்பதை பார்த்தவர்கள் காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் கொடைக்கானல் காவலாளர்கள் அங்குச் சென்றனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது சட்டைப் பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தில், பெயர் ராஜசேகரன் (56) என்றும், தந்தை பெயர் மோனி, ஆலப்புழா, கேரள மாநிலம் என்றும் இருந்தது.
காவலாளர்கள் நடத்திய விசாரணையில் ராஜசேகரன், ஆலப்புலாவில் நகைக் கடை நடத்தி வருவதும், இவர் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி அவரது தலை, கைகளில் காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? பணத்துக்காக நண்பர்களே கொலை செய்தனரா என்றும் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
