Asianet News TamilAsianet News Tamil

மனிதம் மரிக்கவில்லை.. மைலாப்பூரிலும் வாழ்கிறது….பசித்தவர்கள்…. புசிக்க… “சமுதாய பிரிட்ஜ்”

mylapour ....Public fridge
mylapour ....Public fridge
Author
First Published Sep 10, 2017, 8:39 PM IST


மனிதம் மரிக்கவில்லை.. மைலாப்பூரிலும் வாழ்கிறது….பசித்தவர்கள்…. புசிக்க… “சமுதாய பிரிட்ஜ்”

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய மனிதநேய மாண்பாளர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வாழ்ந்த பூமி என்பதை நமது மக்கள் அவ்வப்போது நினைவு படுத்தி வருகிறார்கள்.

ஒட்டிய வயிறோடு இருப்பவர்களுக்கு பசியாற்றுவது மனித குலத்துக்கு மட்டுமே கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரம். அதை சில நேரங்களில் சில மனிதர்கள் ஈரம் காயாமல் காத்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் பெசன்ட் நகரில் “ஐயமிட்டு உண்” என்ற சமூதாய குளிர்சாதனப் பெட்டியை சென்னையைச் சேர்ந்த ஐசா பாத்திமா ஜாஸ்மின் என்ற பல்மருத்துவ அறுவை சிகிச்சை மருத்துவர் தொடங்கினார்.

இந்த திட்டம் மூலம் அந்த குளிர்சாதனப் பெட்டியில் சாப்பிடும் பொருட்கள், உணவுகள் எதை வேண்டுமானாலும் வைக்கலாம். தேவைப்படுவோர் அதை யாருடைய அனுமதியின்றியும் எடுத்து சாப்பிட்டு பசியாறலாம். இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகிடைத்து வருகிறது.

மற்றவர்களின் பசிபோக்கும் இந்த உன்னத திட்டத்தின் தொடர்ச்சியாக மைலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், தளிகை ரெஸ்டாரன்ட் அருகே புதிதாக ஒரு சமூதாய குளிர்சாதனப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் குடிநீர், முதல் உணவு வரை எதை வேண்டுமானாலும், மக்கள் வைத்துவிட்டு போகலாம், தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த சமூதாய குளிர்சாதனப் பெட்டியை மைலாப்பூரில் உள்ள “டெக்சோனிக்” என்ற மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது. “ஜீவன் தன் ப்ரீ புட் பார் ஏ காஸ்” என்ற பெயரில் நம்மிடம் அதிகமாக இருக்கும் உணவுகளை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவோம் என்ற நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதனப் பெட்டியில், புதிதான, சைவ உணவுகள் மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெக்சோனிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதேஷ் பண்டாரி கூறுகையில் “ நாங்கள் 5 மாதங்களுக்குமுன்பே இதுபோன்ற சமூதாய குளிர்சாதனப் பெட்டி சேவையைத் தொடங்க எண்ணிணோம். ஆனால், சரியான இடம் அமையாமல் இருந்தது. உணவுகள் அந்த குளிர்சாதனப் பெட்டிக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணிணோம். அனைவரின் பங்களிப்பும் இருக்குமாறு கருதினோம். பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட  பல விஷேசங்களில் ஏராளமான உணவுகள் வீணாகின்றன. அவை தேவையானவர்களுக்கு அளித்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்துக்காக மைலாப்பூரில் உள்ள தளிகை ரெஸ்டாரன்டுடன் நாங்கள் கூட்டு வைத்து இந்த குளிர்சாதனப் பெட்டி திட்டத்தை தொடங்கினோம்” என்றார்.

தளிகை ரெஸ்டாரண்ட் மேலாளர் கூறுகையில், “ ரெஸ்டாரண்டில் காலை நேர சிற்றூண்டிக்கு பின் இருக்கும் பொங்கல், இட்லி, உப்பு, கிச்சடி ஆகியவற்றை இந்த குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறோம். தேவை உள்ளவர்கள் எடுத்து பயன் பெறுகிறார்கள்.இதேபோல மதிய உணவும், இரவு உணவும் வைக்கப்படுகிறது” என்றார்.

தளிகை ரெஸ்டாரண்ட் போலவே, மைலாப்பூரில்உள்ள ஈஷா லைப் ரெஸ்டாரண்டும் இந்த திட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் இருந்து தங்களின் பங்களிப்பாக அதிகமாக இருக்கும் உணவுகளை இங்கு வைத்துவிட்டு செல்ல இருப்பதாக ஓட்டலின் உரிமையாளர் டி. மீனா தெரிவித்தார்.

மைலாப்பூர் மக்களுக்கு இந்த திட்டம் குறித்து மிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு இருந்து வருகிறது. இதற்காக காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களிடம் இந்த குளிர்சாதனப் பெட்டி குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக பண்டாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இதேபோல பல ரெஸ்டாரன்ட்களின் துணையுடன், சென்னை நகரில் 10 முக்கிய இடங்களில் இதுபோல் சமூதாய குளிர்சாதனப் பெட்டியை வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று பண்டாரி தெரிவித்தார். 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios