அம்மா, சகோதரியுடன் பைக்கில் சென்ற இளைஞரை, போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, சம்பவத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதன் முழு வீடியோ தற்போது வெடிளயாகி உள்ளது.

சென்னை, தி. நகரில் அம்மா மற்றும் சகோதரியுடன் என மூவராக பைக்கில் வந்துள்ளார் ஒரு இளைஞர். போக்குவரத்து போலீஸ் நிறுத்தி கேட்க, அதன் பின் எழுந்த வாக்குவாதத்தில் ஏதோ சலசலப்பாகி இருக்கிறது. இதற்காக அந்த இளைஞரை லைட்டு கம்பத்தில் சாய்த்து ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக் கொள்ள, வயதான போலீஸ் அதிகாரி அந்த இளைஞனின் இடது கையை பிடித்து ரப்பர் போல் வளைத்து மடக்க, மற்றொரு அதிகாரி அவனது கையில் முரட்டுத்தனமாக அடிப்பது என நீள்கிறது. தன் மகன், போலீசாரால் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து துடிக்கும் தாயை, லேடி போக்குவரத்து போலீஸ் அதிகாரி மடக்கிப் பிடித்து தடுத்துக் கொண்டிருப்பார். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் முக்கிய காரணம் என்னவென்பது தற்போது வெளியாகி உள்ளது. போலீசாருக்கும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நடந்த முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில், இளைஞர் பிரகாஷ் மற்றும் அவரது அம்மா சங்கீதாவை போக்குவரத்து போலீசார் இழுத்துக் கொண்டு சாலை ஓரத்துக்கு அழைத்து வருகின்றனர். பிரகாஷை போலீசார் ஒருவர் பிடித்து வைத்துள்ளார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் சங்கீதா, மகனை விடுவிக்க போராடுகிறார்.

அப்போது திடீரென அங்கு வரும் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், சங்கீதாவைப் பிடித்து தள்ளுகிறார். இதில் சங்கீதா நிலைதடுமாறி கீழே விழுகிறார். அவரைப் பிடிக்க பிரகாஷின் தங்கை முயற்சி செய்கிறார். இதனைப் பார்த்த பிரகாஷ், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனைத் தொடர்ந்துதான், பிரகாஷை போலீசார் கம்பத்தோடு பிடித்து வைப்பது நடக்கிறது.