Asianet News TamilAsianet News Tamil

திருவான்மியூர் முத்தூட் நிறுவன கொள்ளை பரபரப்பு வீடியோ காட்சிகள் - 3 பேர் கைது 3 பேரை போலீஸ் தேடுகிறது

muthoot finance-video-footage
Author
First Published Nov 2, 2016, 2:27 AM IST


திருவான்மியூரில் முத்தூட்  நிதிநிறுவன அலுவலகத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட , செயின் பறித்த கொள்ளையர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து  3 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும் பரபரப்பு வீடியோ காட்சி வாசகர்களுக்காக .

சென்னை, பெசன்ட்நகர், எம்.ஜி.சாலையில் முத்தூட் பின்கார்ப் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 28 ஆம் தேதி  மதியம் சுமார் 02.00 மணியளவில்  முத்தூட் பின்கார்ப் அலுவலகத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் அங்கிருந்த பெண் ஊழியரிடம் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற வந்துள்ளதாகவும், ஒரு சவரனுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்றும் விவரம் கேட்டுள்ளனர்.

muthoot finance-video-footage

 அப்போது 5 பேரில் ஒருவர் திடீரென அந்த பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது வாயைப் பொத்தி சத்தம் போடாதே என மிரட்டியுள்ளனர். மேலும், ஒருவர் வேறு அறையில் இருந்த மேலாளரை கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலாளர் தர மறுக்கவே, அந்த நபர் மேலாளரை கத்தியால் தாக்கி காயப்படுத்தி, அவரிடமிருந்து சாவியை பிடுங்கி லாக்கரை திறக்க முயற்சித்தனர். 

அப்போது அங்கு அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரத்தை யாரோ ஒலிக்க செய்துள்ளனர். அலாரம் சத்தம் கேட்டதால் கொள்ளையர்கள் மேலாளரை கத்தியால் குத்திவிட்டு , அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் அறிவழகி (39) மற்றும் பாத்திமா மெர்சி ஆகியோரின் கழுத்திலிருந்து மொத்தம் 6 சவரன் தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

 இதுகுறித்து முத்தூட்  நிறுவனத்தின் மேலாளர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தரமணி உதவி ஆணையர் நேரடி மேற்பார்வையில், திருவான்மியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப்படையினர்  முத்தூட் நிதி நிறுவன  அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் குற்றவாளிகளின் உருவம் தெரிந்தது. அந்த உருவத்தை வைத்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தினர். 

அப்போது  மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து முத்தூட்  கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட  நாவலூரை சேர்ந்த் 1.வெங்கடேஷ் (23), தரமணி கல்லுக்குட்டையை சேர்ந்த 2.சந்துரு (எ) தவக்களை (26), செம்மஞ்சேரியை சேர்ந்த  3.விஜய் (29) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று  கைது செய்தனர்.

muthoot finance-video-footage

 கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய டியோ இருசக்கர வாகனம்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில்  கைது செய்யப்பட்ட சந்துரு (எ) தவக்களை தரமணி காவல் நிலையத்திலும், விஜய் கண்ணகிநகர் காவல் நிலையத்திலும் ஏற்கனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்  என தெரியவந்துள்ளது. 

மேலும், தலைமறைவாகவுள்ள அடையாறு பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த லிங்கா ஆகியோரை போலீசார்  தேடி வருகின்றனர்  விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், சந்துரு மற்றும் விஜய் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிடிபட்ட 3 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள 3 பேரின் குற்றப்பட்டியல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios