இலங்கையில் சென்று இருந்த பிரதமர் மோடி, எனது பெயரையும், நான் சார்ந்த தமிழ் சமூகத்தையும் மக்கள் மத்தியில்  குறிப்பிட்டு பேசியது,  மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மோடியின் பயணம்

இலங்கைக்கு 2 நாட்கள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, தமிழர்கள் வசிக்கும் டிக்கோயா பகுதிக்கு சென்று இருந்தார். அங்கு ரூ.150கோடி மதிப்பில் மருத்துவமனையை திறந்து வைத்து பேசும்போது, “ தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும்தமிழர்கள் உலகிற்கு தந்த பரிசு’’ என குறிப்பிட்டு பெருமையாகப் பேசினார்.

பயிற்சியாளராக

இந்நிலையில், ஐ.பி.எல். அணியான டெல்லி டேடெவில்ஸ் அணிக்கு பந்துவீச்சுப்பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார். பிரதமர் மோடி அவரின்  பெயரை குறிப்பிட்டு பேசியது குறித்து முத்தையா முரளிதரன்டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று  அளித்த பேட்டியில் கூறியதாவது-

பெருமை

இலங்கை வந்திருந்த பிரதமர் மோடி எனது பெயரை மக்கள் மத்தியில் குறிப்பிட்டு பேசியது, எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தத. உலகிலேயே மிகச்சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவில் இருந்து,  எனக்கு உண்மையில் கிடைத்த பெருமையாகும். ஏனென்றால் பிரதமர் மோடி எனது பெயரையும் குறிப்பிட்டு, எனது சமூகத்தின் அடையாளத்தையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இது மிகச்சிறந்த விஷயாக கருதுகிறேன்.

சென்னை மாப்பிள்ளை

எனக்கும், இந்தியாவுக்கும் மிகச்சிறந்த தொடர்பு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து இருக்கிறேன். எனது முன்னோர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறியவர்கள். நாங்கள் 4 அல்லது 5வது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன்.

மூத்த சகோதரர்

என்னைப் பொருத்தவரை இலங்கையும், இந்தியாவும் நெருங்கி உறவினர்கள். இலங்கைக்கு இந்தியா மூத்த சகோதரர் போன்றதாகும். அந்த மாதிரியான உறவுகளைத் தான் நாங்கள் பகிர்கிறோம். எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவை. பல வழிகளில் இந்திய அரசு எங்களுக்கு உதவி இருக்கிறது. எங்களுக்கு இந்தியா என்பது மிகச்சிறந்த நாடாகும்.

மக்களின் நாயகன்

பிரதமர் மோடியை ஒவ்வொருவருக்கும் பிடிக்கும். இந்திய மக்களுக்காக, முன்னேற்றத்துக்காக ஏராளமான நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். அவர் இதுவரை செய்த பல செயல்களால், அவரின் புகழ் வளர்ந்து கொண்டே செல்கிறது. அதை நீங்கள் தேர்தல் நேரத்திலேயே பார்த்து இருக்கலாம். அனைத்து மக்களும் மோடியை விரும்புகிறார் என நினைக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.