முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அவர் நலம் பெற தினம் தோறும் அனைத்து மதத்தின்பரும் பிரார்த்தனையில் ஈடுபடுவதால் அப்போலோ மருத்துவமனை வளாகம் சர்வ மத பிரார்த்தனை கூடமாக மாறி உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி தொண்டர்கள் , பொதுமக்கள் கோவில்களில் , தர்காக்களில், சர்ச்சுக்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கடந்த மாஹாலய அமாவாசை அன்று அப்போல்லோ மருத்துவமனை முன்பு கோவில் பூசாரி பூசணி, தேங்காய் கற்பூரம் வைத்து பூஜை செய்து பிரசாதம் வழங்கினார்.
திருச்சியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் ஜெருசேலம் சென்று விட்டு பிரசாதத்துடன் வந்து அப்போலோ வாசலில் பக்தர்களுடன் ஜெபித்தார். இந்நிலையில் இன்று காலை எம்ஜிஆர் மன்ற மாநிலச்செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட ஆண் ,பெண் இஸ்லாமிய தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடினர்.
பின்னர் அனைவரும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெறுவதற்காக இஸ்லாமிய முறைப்படி பாத்தியா ஓதி பிரார்த்தனை செய்தனர்.
முதலமைச்சர் நலமடைய தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
